மயிலாடுதுறையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு:-
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து பைப் லைன் மூலம் மயிலாடுதுறை நகர பூங்கா, திருவிழந்தூர், மாமரத்து மேடை, தருமபுரம் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தினமும் காலை ஒரு வேலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் காலை 15 நிமிடங்கள் மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனையால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவது தொடர்கதையாக உள்ளது. பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் மயிலாடுதுறை கேனிக்கரை பகுதியில் உள்ள ஆராயத்தெரு, வெள்ளாந்தெரு பகுதியில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடுமையான துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளோடு திருவாரூர் சாலை கேனிக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தையில் கேபிள் மாற்றும்போது பைப்லைன் உடைக்கப்பட்டதால் கழிவுநீர் கலந்ததாகவும் சரி செய்து தருவதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.













