மயிலாடுதுறை அருகே நல்லாடை பகுதியில் மாணவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை திருடும் மர்ம நபர் ; சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நல்லாடை மூக்கூட்டு பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்களது கிராமங்களில் இருந்து சைக்கிள்களில் வந்து, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிள்களை நிறுத்திவிட்டு பேருந்துகள் மூலம் மயிலாடுதுறை, சங்கரன்பந்தல், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மன்னம்பந்தல், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு படிப்பதற்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி காலையில் மாணவ, மாணவிகள் வழக்கம்போல் சைக்கிள்களை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். அப்போது அங்கு நோட்டம்விட்டு கொண்டிருந்த நபர் மாணவிகள் சென்ற பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மேலும், இதே பகுதியில் அடிக்கடி மாணவர்களின் சைக்கிள்கள் திருடப்படுவதாகவும், இது தொடர்கதையாக மாறியுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் மதுபான கடை மற்றும் சாராயக்கடை இருப்பதால் தினந்தோறும் அதிகளவில் மதுப்பிரியர்கள் செல்கின்றனர். அவர்களில் யாராவது எடுத்து சென்று விற்று மது வாங்கி குடித்து இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த பகுதியில் சைக்கிள் திருட்டுகளை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













