காசிக்கு இணையான புண்ணிய இடங்களில் ஒன்றான மயிலாடுதுறை காவிரி ஆற்றில், தண்ணீர் இல்லாத நிலையில், வாட்டர் கேன்களில் நிரப்பப்பட்ட தண்ணீர் கொண்டு, பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அமாவாசை திதி, தர்ப்பணம் அளித்து வழிபட்டனர், புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்ப பக்தர்கள் கோரிக்கை :-
காசிக்கு இணையான இடங்கள் என்று தமிழ்நாட்டில் ஆறு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் மயிலாடுதுறை காவிரி படித்துறை ஒன்றாகும். காசியில் கங்கை கரையில் இருப்பது போல் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றங்கரையில் ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளிப்பது மிகுந்த புண்ணியம் சேர்ப்பதாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் பிளாஸ்டிக் வாட்டர் கேன்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை வைத்து தர்ப்பணம் அளித்தனர். வறட்சி காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு காவிரி ஆற்றில் மின்மோட்டார்கள் உள்ள நிலையில், அவற்றை கொண்டு தண்ணீர் நிரப்பதற்கும் தற்காலிகமாக டேங்கர்களில் தண்ணீர் வழங்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.













