டெல்லியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று ஆல்ரவுண்டராக சிறப்பித்து தமிழக அணியை சாம்பியன் பட்டம் பெற வைத்த திருவாரூர் வீரர் – ஏழ்மை நிலையில் உள்ள இவருக்கு தமிழக அரசு சார்பில் வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை*
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட கொடிக்கால்பாளையம் அருகே உள்ள சாமந்தன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருக்கு வயது 35. எம்ஏ. தமிழ் படித்துள்ள மாற்றுத்திறனாளியான மாதவனுக்கு, சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத காதல் இருந்து வந்துள்ளது.
மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் சக நண்பர்களுடன் பள்ளிக்காலத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இவரது அசாத்திய திறமையை கண்ட இவரது நண்பர்கள் மாதவனை மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து கல்லூரி படிக்கும் போது மாற்றுத் திறனாளி கிரிக்கெட் விளையாட்டில் தீவிரம் காட்டியுள்ளார் மாதவன். கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக தஞ்சையில் உள்ள சிட்டிங் கிரிக்கெட் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள கிரிக்கெட் அமைப்பில் இணைந்து வீல்சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடும் பயிற்சியை பெற்று கர்நாடகம், பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், விசாகபட்டிணம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆல்ரவுண்டராக விளையாடி 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி போலவே புதுடில்லியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் வீல்சேரில் அமர்ந்தவாறே பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது . கடந்த ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில், தமிழ்நாடு அணியில் கேப்டன் சந்தோஷ் என்பவர் தலைமையில் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாடி முதல் பரிசு பெற்று வெற்றிக்கோப்பையுடன் ஊர் திரும்பியுள்ளனர்.
மாதவனின் சாதனையை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாதவனின் தந்தை செல்லப்பா கடல் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது தாய் மணிமேகலை உடன் மாதவன் வசித்து வருகிறார். இவருடன் பிறந்த 3 சகோதரிகளுக்கும் மாதவன் தான் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ஆனால் மாதவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருந்தாலும் ஏழ்மை காரணமாக அவ்வப்போது பல்வேறு தொழில்களையும் செய்து வாழ்க்கையை கடத்தி வருகிறார் மாதவன். இவர்கள் வசிக்கும் வீடும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மாதவனுக்கு நிரந்தர வேலையோ, வருவாயோ கிடையாது. கிரிக்கெட் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை கூட தேவைக்கு வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் சேவை அமைப்புகளின் ஆதரவோடு கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகளில் மாதவன் பங்கேற்று வருகிறார்.
INDIAN WHEELCHAIR CRICKET PREMIER LEAGUE என்ற பெயரில் கடந்த 6 வருடங்களாக ஐபிஎல் பார்மெட்டில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணி பங்கேற்கவில்லை. ஏழாவது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக மாதவன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி பங்கேற்று கோப்பையை வென்றுள்ளது.
தமிழக அணி பங்கேற்ற முதல் முயற்சியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் மாதவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன் குடும்பத்தினர் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். பாதுகாப்பாக வசிக்க ஒரு வீடு, வருவாய்க்கு ஒரு வேலையை தமிழ்நாடு அரசு மாதவனுக்கு வழங்க வேண்டும். எழுந்து நடக்க முடியாத நிலையிலும் வீல்சேரில் அமர்ந்தவாறு கிரிக்கெட் விளையாடி வெற்றிபெற்று திரும்பியுள்ள மாதவனை அரசு கவுரவித்து போதிய உதவிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.













