மானியத்துடன், குறைந்த விலையில் டீசல் வழங்க கோரி பழையார் மீனவர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையார் கிராமத்தில் 3000 த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350 விசைப்படகுகள் 600க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டு கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வரும் படகுகளுக்கு பழையாறு துறைமுகத்தில் உள்ள தமிழ்நாடு மீன்பிடி வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் டீசல் பங்கில் இருந்து மானிய விலையில் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த டீசல் பங்க் மூலம் விநியோகிக்கப்பட்ட டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 146 என விலை ஏற்றம் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கி நாளை இரவுடன் முடிவடைய உள்ள நிலையில் விலை ஏற்றத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 101 க்கும், வானகிரியில் உள்ள மீன் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையத்தில் மானியத்துடன் கூடிய டீசல் லிட்டர் ஒன்று ரூ 83.68 க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் வானகிரி டீசல் பங்கில் இருந்து முதற்கட்டமாக தங்களுக்கு டேங்கர் லாரி மூலம் மானியத்துடன் கூடிய குறைந்த விலை டீசல் விநியோகம் செய்ய வேண்டும். விரைவில் பழையார் மீன்பிடி துறைமுகத்தில் மானியத்துடன் சில்லரை டீசல் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனு அளித்து வந்தனர், ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று பழையார் மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் மற்றும் வருவாய் துறை மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.















