மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், உள்கட்டமைப்புப் பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தீவிரப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மதுரை மேற்கு தொகுதியில் சாலை வசதி, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த வடிகால் திட்டத்தின் மூலம் கோவில்பாப்பாகுடி ஊராட்சி பகுதிகளில் தேங்கும் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு, அப்பகுதி மக்களின் சுகாதார நிலை மேம்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த பூமி பூஜை விழாவில் அண்ணா தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, திரவியம், பறவை ராஜா, உசிலை பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர். செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். திட்டப்பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் செல்லூர் ராஜூ அறிவுறுத்தினார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இந்தத் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

















