மாஸ்கோ : உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி 24ஆம் தேதி முதல், உக்ரைன் மீது ரஷ்யா பீரங்கிப் போர் தொடுத்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என்பதே இதன் பின்னணி என சொல்லப்படுகிறது. இரு நாடுகளிடையே நடைபெறும் போர் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, ரஷ்ய எல்லைப் பகுதியான குர்ஸ்க்கு புதின் ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டபோது, அவருடைய விமான பாதையில் உக்ரைன் ஏவிய ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புத் தரப்பினர், “அதிபர் ஹெலிகாப்டர் வானில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, அதனை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், எச்சரிக்கையுடன் செயல்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் அந்த ட்ரோனை இடைமறித்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தினர்” என தெரிவித்தனர்.
குர்ஸ்க் பகுதியை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றி விட்டதாக ஏற்கனவே ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், அதிபர் புதின் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இதனாலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை உக்ரைன் தரப்பில் இருந்து இதற்கு பதில் வராத நிலையிலும், இது இருநாட்டு உறவுகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது.