தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யாகப்பன் தலைமையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நிலக்கோட்டை கமலாபுரத்தில் பிரம்மாண்ட தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அதிமுகவின் தேர்தல் திட்டங்களை விளக்கி எழுச்சி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள 5 முக்கியத் திட்டங்களை மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 2000 வழங்கும் திட்டம், அரசுப் பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பாகுபாடின்றி அனைவரும் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி, உழைக்கும் மகளிருக்கு ‘அம்மா இருசக்கர வாகனம்’ வாங்க ரூ. 25,000 இலவச மானியம் வழங்குதல், வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் வழங்கும் ‘அம்மா திட்டம்’ மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 100-லிருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்குதல் ஆகிய 5 அதிரடி வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார். இந்தத் திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் எனத் தெரிவித்ததோடு, அதிமுகவினர் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த எழுச்சிமிகு கூட்டத்தில் முன்னாள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் தவமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், நிலக்கோட்டை நகரப் பொறுப்பாளர் மோகன்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வலியுறுத்தி நிர்வாகிகள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.
















