தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நிர்மலா நகர் கார்மெல் குழந்தை இயேசு திருத்தலத்தில், ஆன்மீகப் பெருவிழாவாக ஐம்பெரும் விழாக்கள் மிக விமரிசையாகத் தொடங்கியுள்ளன. திருத்தலத்தின் பொன்விழா, கார்மெல் குழந்தை இயேசு நவநாள் விழா, புதுப்பிக்கப்பட்ட திருத்தல அர்ச்சிப்பு விழா, ஆண்டு பெருவிழா கொடியேற்றம் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3½ அடி உயர கார்மெல் குழந்தை இயேசு வெண்கலச் சொரூபம் திறப்பு விழா ஆகிய ஐந்து முக்கிய நிகழ்வுகளும் ஒரே மேடையில் அரங்கேறின. தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ் அவர்கள் தலைமை தாங்கி, திருத்தலத்தைப் புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் சிறப்புப் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இந்த எழுச்சிமிகு நிகழ்வில் மதர் தெரசா பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து, இந்திய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மேலும் கார்மெல் 3-ம் சபை, பவுர்ணமி ஜெபக்குழுவினர், 3 மணி ஜெபக்குழுவினர், குழந்தையின் குரலோசை குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இனம், மதம் கடந்து திரளாகக் கலந்து கொண்டனர். வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், தினந்தோறும் மாலையில் ஜெபமாலை, நவநாள் சிறப்புத் திருப்பலி, நோயுற்றோருக்கான குணமளிக்கும் ஜெபக் கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பரத் தேர்பவனி பிப்ரவரி 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு வலங்கைமான் பங்குத்தந்தை மற்றும் குழும அருட் தந்தையர்கள் ஆல்பர்ட் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் பெருவிழா திருப்பலி, திருச்சி கார்மெல் சபை தமிழ்மறை மாநில மற்றும் ஆலோசக தந்தையர்களின் தலைமைத் தந்தை ஜெயராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அருட்தந்தை கிறிஸ்துதாஸ் மறையுரை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டத் தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் சுரேஷ்குமார் தலைமையில் கார்மெல் சபை குருக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து செய்து வருகின்றனர். தேர்பவனி நிறைவில் நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவடையும்.
















