சென்னை :
தமிழகத்தில் வெயில் தாக்கம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து, ஆரம்பகாலத்தில் எழுந்த பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் குறித்து வந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கல்வித்துறை.
முதற்கட்டமாக, பள்ளிகள் இயங்கும் தேதி குறித்து குழப்பம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்படலாம் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது நிலவும் வானிலை பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, இயல்புப்படி பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் செயல்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.