தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய ‘பாரதிதாசன் அறிவுலகம்’ நூலகக் கட்டுமானப் பணிகளைச் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது ரூ.103.9 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நூலகமானது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் ஒரு அறிவுப் பெட்டகமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 6,958 சதுர மீட்டர் பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு அடுக்குகளுடன் அமையவுள்ள இந்த பிரம்மாண்டக் கட்டடம், ஒவ்வொரு தளத்திலும் தனித்துவமான வசதிகளைக் கொண்டிருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 300 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்டக் கூட்டரங்கம் மற்றும் கலைக்கூடம் அமையவுள்ளது. முதல் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கெனத் தனிப்பிரிவும், இரண்டாம் தளத்தில் குழந்தைகளைக் கவரும் வகையில் அறிவியல் மையம், கிட்ஸ் தியேட்டர் மற்றும் ஏஆர்/விஆர் (AR/VR) தொழில்நுட்ப அறைகளும் இடம்பெறவுள்ளன. மூன்று மற்றும் நான்காம் தளங்களில் முறையே தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களுக்கெனத் தனித்தனி வாசிப்புப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. ஐந்தாம் தளத்தில் நவீன டிஜிட்டல் நூலகம் மற்றும் அரிய புத்தகங்களைப் பாதுகாக்கும் பிரிவு அமையவுள்ளது. ஆறாம் தளத்தில் நூலக அலுவலகம் மற்றும் காணொளி அறைகள் அமைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் நான்கு அதிநவீன மின்தூக்கிகள் (Lifts) நூலகத்தில் பொருத்தப்பட உள்ளன. ஒரு லட்சம் புத்தகங்கள், குளிரூட்டப்பட்ட வாசிப்பறைகள், உயர்தர சுகாதார வளாகங்கள் எனச் சர்வதேசத் தரத்தில் இந்த அறிவுலகம் செதுக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இரா.ராஜேந்திரன், “முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கட்டுமானப் பணிகள் அனைத்தும் மிகத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள்ளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார். இவ்விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலரவிக்குமார், செயற்பொறியாளர் எஸ்.தியாகராஜன், மாவட்ட நூலக அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

















