திருப்பத்தூர் மாவட்டம் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த பொன்முடி – சுகுணா தம்பதியரின் மகளான யாஷினி, சென்னை வேலம்மாள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட யாஷினி, பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகிறார்.
மேலும் அந்த வகையில், நவம்பர் 2025-ல் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 27-வது ஆசிய இளைஞர் சதுரங்க அணி சாம்பியன்ஷிப் போட்டியிலும், டிசம்பர் 2025-ல் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 14-வது தேசிய பள்ளி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்ற யாஷினி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பத்தூர் திரும்பிய யாஷினிக்கு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அவரது இல்லமான தர்மராஜா கோயில் தெருவுக்கு வந்தடையும் வரை, பொதுமக்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில் பட்டாசு வெடித்து கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் யாஷினியை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வெற்றி குறித்து யாஷினி கூறுகையில்,
“இந்திய நாட்டிற்காக விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே எனது ஒரே குறிக்கோள்” என தெரிவித்தார்.
இளம் வயதிலேயே உலக அரங்கில் தடம் பதித்து வரும் யாஷினியின் இந்த சாதனை, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















