மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் குணா.28. டிரைவர். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இலக்கியா(25) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சபரிமலை செல்ல மாலை அணிந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி உச்சிமேடு கிராமத்தில் ஒருவர் இறந்ததை தொடர்ந்து சபரிமலை செல்ல மாலை அணிந்து இருந்த குணா உள்ளிட்ட சிலர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இரவு தங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது குணாவை காணவில்லை. இதை அடுத்து தனது கணவர் காணவில்லை என இலக்கியா சீர்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று சீர்காழி சட்டநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள கருவை காட்டில் குணா தூக்கிட்ட நிலையில் இறந்து இருந்தது தெரிய வந்தது. மேலும் இறந்த குணாவின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் உள்ளதாகவும் அதனால் யாரேனும் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்ற போது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி கொடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய இறப்பு நிகழ்ந்து இருக்காது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குணா இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சீர்காழி காவல் ஆய்வாளரும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் சாலை மறியல் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

















