சொந்த மாவட்டம் எனக் கூறிக்கொண்டு திருவாரூர் வளர்ச்சி அடைய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கையாலாகாத திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய, நகர,பேரூர் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்றும், விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் திமுக அரசுக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரண வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை செய்யும் திராவிட மாடல் அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கஞ்சா, மது, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், நன்னிலம், பூந்தோட்டம், குடவாசல் போன்ற மாவட்டத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் மருத்துவர்கள் செவிலியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த மாவட்டம் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, திருவாரூர் வளர்ச்சி அடைய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அனைத்து துறைகளிலும் திருவாரூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. இத்தகைய செயலை செய்து வரும் கையாலாகாத திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாப்பா வெற்றி கலந்து கொண்டார்.
பேட்டி : ஐயப்பன் வடக்கு மாவட்ட செயலாளர்















