தென் மாவட்டங்களின் முக்கிய போக்குவரத்து நரம்பாக விளங்கும் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, தற்போது பராமரிப்புப் குறைபாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பாதையாக மாறியுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டாலும், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (சென்டர் மீடியன்) மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலை விதிகளின்படி, எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளி (Headlight glare) ஓட்டுநர்களின் கண்களைக் கூசச் செய்யாத வண்ணம், சென்டர் மீடியனில் குறிப்பிட்ட இடைவெளியில் அரளி போன்ற பசுமைச் செடிகளை வளர்க்க வேண்டும். ஆனால், காரியாபட்டி மற்றும் கல்குறிச்சி போன்ற முக்கியப் பகுதிகளில் இத்தகைய செடிகள் இல்லாததால், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் அதீத ஒளியால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் சூழல் நிலவுகிறது.
சமீபகாலமாக பெய்து வரும் தொடர் பருவமழையின் காரணமாக, சென்டர் மீடியன் முழுவதும் அடர்த்தியான புற்கள் மற்றும் தேவையற்ற செடிகள் புதர்போல மண்டி வளர்ந்துள்ளன. இந்த அடர்ந்த புதர்கள் சாலையின் ஓரங்களை மறைப்பதோடு, சில இடங்களில் வாகனங்களின் பார்வைத்திறனை (Visibility) வெகுவாகப் பாதிக்கின்றன. குறிப்பாக வளைவுகளில் திரும்பும்போதும், எதிரே வரும் வாகனங்களின் வேகம் மற்றும் தூரத்தைக் கணிக்க முடியாமலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். காரியாபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் செடிகள் வளர்க்கப்பட வேண்டிய இடங்கள் திறந்த வெளியாகக் கிடப்பதால், அதிவேகமாக வரும் வாகனங்களின் விளக்கு ஒளி நேரடியாகக் கண்களில் பட்டு விபத்துகள் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்தச் சாலையில், சென்டர் மீடியன் பராமரிப்பு மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இரவு நேரங்களில் கண் கூசுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது வளர்ந்துள்ள புற்கள் சில இடங்களில் சாலைக்குள்ளும் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது” என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, சென்டர் மீடியனில் மண்டியுள்ள புதர்களை அப்புறப்படுத்துவதோடு, விதிகளின்படி அங்கு அடர்த்தியான பசுமைச் செடிகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப்பலிகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

















