பிரபல மலையாள நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் மறைவிற்கு, நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஸ்ரீனிவாசனின் மறைவு செய்தி தன்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீனிவாசன், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 69. இந்த மறைவு குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் ஆடியோவில்,
“ஸ்ரீனிவாசன் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு அருமையான மனிதரும் கூட. நானும் அவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக பயின்ற வகுப்பு தோழர்கள். அந்த நாட்களின் நினைவுகள் இப்போது மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த ஸ்ரீனிவாசன், இதுவரை 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் தனித்துவமான நடிப்பு, இயல்பான முகபாவனைகள் மற்றும் யதார்த்தமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.தமிழிலும் ‘லேசா லேசா’, ‘புள்ளக்குட்டிக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், குறிப்பாக லேசா லேசா படத்தில் அவர் செய்த காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாததாக உள்ளன.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள பட்டியத்தில் பிறந்த ஸ்ரீனிவாசன், மலையாள திரையுலகில் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தனது திரைப்பயணத்தில் ஒரு தேசிய விருது, இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆறு முறை கேரள அரசின் திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீனிவாசனின் மறைவு, மலையாள மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.
















