குளத்தில் வண்டல் மண் எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரை சேர்ந்தவர் ஆர்கேகுகன். இவர் அதே ஊரில் உள்ள குளத்தில் வண்டல்மண் எடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி குத்தாலம் வட்டாட்சியரிடம் ஆணை பெற்று மண் எடுக்க சென்றுள்ளார். இதனை கீழையூரை சேர்ந்த குமார், தேரழுந்தூரை சேர்ந்த சஞ்சய் ஆகியோர்; தடுத்து மண் எடுக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து, ஆர்கேகுகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10.07.2025 அன்று உத்தரவு பெற்று, வட்டாட்சியர், கனிமவளத்துறை அலுவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோதும், குமார், சஞ்சய் இருவரும் தடுத்ததுடன், பணியை தொடங்க முடியாமல் குளத்தில் இரவோடு இரவாக நீரை திறந்துவிட்டு நிரப்பியுள்ளனர். இதையடுத்து, ஆர்கேகுகன் மயிலாடுதுறை நீதிமன்றத்தை நாடி மண் எடுப்பதைத் தடுத்தவர்கள்மீது கடுமையான சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளார். உயர்நீதிமன்ற ரிட் உத்தரவை மதிக்காமல் வண்டல்மண் எடுப்பதை தடுத்து பிரச்னையில் ஈடுபட்டவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என குத்தாலம் போலீசாருக்கு மயிலாடுதுறை நீதித்துறை நடுவர்நீதிமன்ற நீதிபதி உம்முல் பரிதா உத்தரவிட்டுள்ளார்.

















