புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவைத் தொடர்ந்து, இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, வடகாடு கோவிலின் தேரோட்ட நிகழ்வில், சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்தவர்கள் தேர்வடம் தொட்டு கொடுப்பது பாரம்பரியமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த ஆண்டும், அதேபோன்று தேரோட்ட நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திருமாவளவன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், தேரோட்டத்தில் பட்டியல் இனத்தவரை தாக்கி, குடியிருப்பு பகுதிகளில் தீவைத்து வீடுகளும் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த பேட்டி உண்மைக்கு புறம்பானதாகவும், சமூகங்களிடையே பகையைத் தூண்டக்கூடியதாகவும் சேர்வைகாரன்பட்டி பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்து, திருமாவளவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில், “வடகாடு கோவில் திருவிழா சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறுகள் இருந்தால், அவற்றை திருத்திக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.