வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி வரை சராசரியாக 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது மயிலாடுதுறையின் புறநகர் பகுதியான பட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் ராமகிருஷ்ணா நகர், ARCரத்தினம் நகர், கீழப்பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்து மறுகால் செல்வதற்கு வடிகால் வாய்க்கால் சூழ்ந்து போன காரணத்தால் தண்ணீர் வெளியேற வழி இன்றி தேங்கி கிடக்கின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனத்தில் செல்பவர்களும், பாதசாரிகளும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வடிகால்வாய் காலை சீர் செய்ய வேண்டும் என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு செய்தும் பலன் இல்லை என்றும், தற்போது இந்த மழை காரணமாக தண்ணீர் தேங்கியு உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் நுழைந்து விடுவதாகவும், வடிகால் வாய்க்கால் ஆக்கிரமைப்பை அகற்றிய தண்ணீர் வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















