காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தற்குறிகள் குறித்த சர்ச்சைக்கு விஜய் நேரடியாக பதிலளித்தார். திமுகவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், “நம்மை தற்குறிகள் என்று சொல்வோர் தான் தமிழ்நாட்டு அரசியலின் உண்மையான ஆச்சரியக்குறிகள்” என்று தெரிவித்தார்.
சுமார் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகளை, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேற்று மக்களிடம் வழங்கினார். இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.
உரையின் தொடக்கத்தில், அண்ணாவை நினைவுகூரும் வகையில் எம்.ஜி.ஆரின் ‘நாட்டிற்காக உழைப்பதற்காக அண்ணா பிறந்தார்’ பாடலை விஜய் பாடினார். தொடர்ந்து, “காஞ்சிபுரம் எனக்கு விசேஷமான இடம். நான் கட்சி தொடங்கியபின் முதல் களப் பயணம் பரந்தூரிலிருந்து தான் தொடங்கியது. இன்று மனவேதனைக்குப் பிறகும் காஞ்சிபுரம்தான் எனது பயண தளமாக உள்ளது” என்றார்.
திமுகவை விமர்சித்த அவர், “அண்ணா தொடங்கிய கட்சியை இன்று என்னென்ன நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. நாங்கள் அண்ணாவின் ‘மக்களிடம் செல்’ என்ற கொள்கையைப் பின்பற்றி செயல் படுகிறோம். ஆனால் அவர்கள் அண்ணாவையும், அவரது கொள்கைகளையும் மறந்துவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
தமது கட்சியை குறைசொல்லும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக கூறிய விஜய், “எங்கள் கட்சி மீது சட்டப்பேரவை முதல் பொதுவான நிகழ்ச்சிகள் வரை தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் விரும்பி வரவேற்கும் ஆட்சியை நாங்கள் அமைப்போம். அரசியல் எதிரி யார், கொள்கை எதிரி யார் என்பதை தெளிவாகவே கூறி வந்திருக்கிறோம்” என்றார்.
தற்குறிகள் குறித்த சர்ச்சையைப் பற்றி பேசும் போது விஜய், “எங்களை தற்குறிகள் எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால், இத்தனை வருடங்களாக எங்களிடம் வாக்கு பெற்றவர்கள் யார்? தற்குறிகள் என்று கூறும் இவர்கள் தான் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளுகிறவர்கள். இவர்கள் தற்குறிகள் அல்ல… தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறிகள்” என கடுமையாக விமர்சித்தார்.
















