பிரபல கன்னட நடிகரும், ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் “சாச்சா” எனும் கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஹரிஷ் ராய், நீண்டநாள் புற்றுநோய் நோயால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 52.
ஹரிஷ் ராய் கடந்த சில மாதங்களாக தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு தேவையான மருந்து மற்றும் ஊசிகளுக்கான பெரும் செலவை சமாளிக்க முடியாமல் இருந்ததை அவர் சமீபத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். ஒரு ஊசிக்கு ரூ.3.55 லட்சம் வரை செலவாகியதால், தினமும் மூன்று ஊசிகள் தேவையான நிலை ஏற்பட்டது. இதனால் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவச் செலவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது. பின்னர் 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ ரூ.1200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ஹீரோவுக்கு சக்தி சேர்க்கும் நம்பகமான துணையாக ஹரிஷ் ராய் நடித்திருந்தார்.
அவர் முன்பாக சிவராஜ்குமார் நடித்த ‘ஓம்’ படத்தில் “டான் ராய்” என்ற கதாபாத்திரம் மூலம் கன்னட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். தீவிரம், இயல்பான நடிப்பு, கூர்மையான வசன உச்சரிப்பு ஆகியவற்றால் தனித்த அடையாளம் பெற்றவர்.
அண்மையில், உடல் மெலிந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கலங்கச் செய்தன. இறுதியில் சிகிச்சை பலனின்றி இன்று பெங்களூருவில் காலமானார்.
திரையுலகினரும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.















