சென்னை: தவெக சார்பில் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு நடிகர் விஜய் வருகை தந்தார். இதற்கு முன், விஜயின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 10 மணியளவில் விஜய் தனது காரில் மாமல்லபுரம் சென்றார். அவரை பின்தொடர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் கொண்ட கருப்பு நிற கார், ஒரு திருப்பத்தில் எதிரே சென்ற வெள்ளை நிற காரில் மோதியது. இதில் அந்த வெள்ளை காரின் கதவு சேதமடைந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில நிமிடங்களில் இரு கார்களும் அங்கிருந்து புறப்பட்டன. அந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விஜய் சிலகாலம் பிரசாரத்திலிருந்து விலகியிருந்தார். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, கட்சியின் நிர்வாகக் குழுவை மறுசீரமைத்தார்.
மேலும், கூட்டங்களில் ஒழுங்கை பேணும் நோக்கில் 2,500 பேரைக் கொண்ட “மக்கள் பாதுகாப்பு படை”யை அமைத்த தவெக, அந்தப் படையினருக்கு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் வழிகாட்டுதல் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவுக்கு முன்பே நடந்த இந்த கார் விபத்து, கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
















