கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக சிபிஐ அதிகாரிகள் தற்போது கரூரில் முகாமிட்டுள்ளனர். இதனுடன், மற்றொரு குழு சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திலும் ஆய்வை மேற்கொள்ள வந்தது.
அங்கு அலுவலக ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அலுவலக ஊழியர்களிடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. அந்த நேரத்தில் கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அங்கு இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கூறியதாவது :
“சிபிஐ அதிகாரிகள் சில ஆவணங்களுடன் சிசிடிவி காட்சிகளையும் கேட்டுள்ளனர். அவற்றை நிச்சயமாக வழங்க உள்ளோம். எங்களுக்கு இதுவரை நேரில் ஆஜராகச் சொல்லி எந்த சம்மனும் வரவில்லை. அவ்வாறு அழைப்பு வந்தால் நிச்சயமாக நேரில் ஆஜராவோம்,” என்று தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த விசாரணை முடிவில் சிபிஐ அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

















