மதுரையிலிருந்து சென்னைக்குத் வந்த இண்டிகோ விமானத்தில் இன்று அதிகாலை பரபரப்பு நிலை ஏற்பட்டது. விமானத்தின் முன்புறக் கண்ணாடியில் பறக்கும் நிலையிலேயே விரிசல் ஏற்பட்டது.
அதிகாலை புறப்பட்ட அந்த விமானத்தில் மொத்தம் 76 பயணிகள் இருந்தனர். தரையிறங்குவதற்கு முன்பு, விமானத்தின் முன் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதை விமானி கவனித்தார். உடனே கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விமானம் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தின் கண்ணாடியை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரைக்கு திரும்பியிருக்க வேண்டிய விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுவானில் விமானக் கண்ணாடி உடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக இண்டிகோ உள்ளிட்ட சில விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.