வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பிற்பகல் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,339 புள்ளிகளில் முடிந்தது. அதேசமயம் நிஃப்டி 24,650க்கு கீழ் சரிந்தது.
சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை, இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை குறித்த நிச்சயமின்மை, அமெரிக்கா–இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பான கவலைகள் மற்றும் ஐடி பங்குகளில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
காலை வலுவாக துவங்கிய சந்தை, பின்னர் சீர்குலைந்தது. சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்ந்து 80,834 புள்ளிகளை எட்டிய நிலையில், மதியம் 12.30 மணியளவில் 80,339 புள்ளிகளாக சரிந்தது. நிஃப்டியும் 24,785 புள்ளிகளில் இருந்து 24,643 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது.
இன்ட்ராடே வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, அதானி எண்டர்பிரைசஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் லார்சன் & டூப்ரோ போன்ற பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன.
சந்தை வீழ்ச்சிக்கான காரணிகள் :
- வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை
வெள்ளிக்கிழமை மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.5,687 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த வெளியேற்றம் பங்குச்சந்தை மற்றும் ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. - ரிசர்வ் வங்கி கொள்கை நிச்சயமின்மை
அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவு குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். ரெப்போ விகிதம் 5.50% ஆகத் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், உலகளாவிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எதிர்பாராத மாற்றம் ஏற்படுமோ என்ற கவலை உள்ளது. - அமெரிக்கா–இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் இன்னும் தெளிவு இல்லாதது முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்துள்ளது. குறிப்பாக இறக்குமதி சுங்கக் குறைப்பில் முன்னேற்றமின்றி இருப்பது கவலைக்குரியதாக கருதப்படுகிறது. - ஐடி பங்குகளில் பலவீனம்
H-1B விசா தொடர்பான அமெரிக்க விதிமுறை மாற்றங்கள், இந்திய ஐடி துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் ஐடி பங்குகள் வீழ்ச்சி கண்டன.