மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ்நாடு நீலம் பண்பாட்டு மையம் நிர்வாகிகள் ஆறுதல்:- கொலையில் தொடர்புடைய விடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்யகோரி மாவட்ட எஸ்பியிடம் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமத்தை சேர்ந்த வைரமுத்துவும், அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகள் மாலினியும் 10 வருடங்களாக காதலித்து வந்ததற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி வைரமுத்துவை மாலினியின் குடும்பத்தினர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாலினியின் சகோதரர் குகன், மாலினியின் சித்தப்பா பாஸ்கர், மாலினியின் தாயார் விஜயா, மற்றும் அன்புநிதி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விஜயா மாற்று சமூகத்தினர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு நீலம் பண்பாட்டு மையம் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் உதயா தலைமையில் அம்மையத்தினர், வைரமுத்து குடும்பத்தினரையும் மாலினியையும் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையத்தினர் வைரமுத்து குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேரடியாக சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.
வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமி அளித்த மனுவில் வைரமுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான கவியரசன், ஆனந்த், சுபாஷ், மாலினியின் சகோதரர் குணால், மற்றும் ஷகிலாபானு ஆகிய குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் நிர்கதியாக தவிக்கும் மாலினிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தங்கள் வீட்டின் அருகே சிசிடிவி கேமரா பொருத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
காதலர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பாதுகாப்பு வழங்கியிருந்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்காது. இந்த வழக்கில் விடுபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் உதயா தெரிவித்தார்.
பேட்டி: உதயா (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு நீலம் பண்பாட்டு மையம்)
