கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் செயல் அலுவலர் தூய்மை பணியாளர்களை திட்டியதாக வெளியான வீடியோ தவறானது எனவும் சமூக வலைதளங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் குறித்து பரப்பப்படும் அவதூறு வீடியோவை நீக்க கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இரணியல் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்கள் மதிய வேளையில் உணவு உண்ணாமல் இருந்த நிலையில் அவர்களை உணவ உண்ண கூறி இரணியல் பேரூராட்சி செயல் அலுவலர் திட்டுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் இதனை மறுத்து வந்தனர். தங்களை செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடத்த வில்லை எனவும் தங்களை உணவு உண்ணாமல் பணியில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்திய காட்சியை இவ்வாறு திரித்து அவருக்கு எதிராக பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும் சமூக வலை தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவை நீக்க கோரியும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

















