திருச்சி :
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். விஜயைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பெண்கள் என திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடைப் பகுதி வரை மக்கள் பெரும் திரளாக கூடினர்.
விஜய் தனியார் விமானம் மூலம் காலை நேரத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது ரசிகர்கள் மேளதாளம் முழங்க, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், அதை மீறி ரசிகர்கள் உள்ளே புகுந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், விஜயின் பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்து ஏராளமான தொண்டர்கள் திரண்டதால் வாகனம் இன்ச்-இன்ச்சாகவே முன்னேறியது. காவல்துறையினர் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர அனுமதி அளித்திருந்த நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விஜயின் வாகனத்துடன் பின்தொடர்ந்து வந்ததால் சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விஜய் தனது முதல் பிரச்சார உரையை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. 10.30 மணிக்கே பிரச்சாரம் தொடங்க வேண்டிய நிலையில், ரசிகர் கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையத்திலிருந்து வெளியில் வர விஜய்க்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலான தாமதம் ஏற்பட்டது.
திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கூட்ட நெரிசலால் சாலைகளில் தொண்டர்கள் விட்டுச்சென்ற செருப்புகள், காலணிகள் சிதறிக்கிடந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் ரசிகர்கள் கட்டடங்கள், வீடுகள், மரங்கள் மீது ஏறக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இருந்தாலும், கூட்டம் கட்டுக்குள் வராததால் சிலர் பேனர்கள், கட்டடங்கள் மீது ஏறி விஜயின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.