சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்தி மறைவையொட்டி, ஓசூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் சென்னை திரும்புகிறார்.
இன்று காலை 11 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், மதியம் 1 மணிக்கு எல்காட் நிறுவனத்தின் புதிய ஐடி தொழில் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, குருபரப்பள்ளியில் அமைந்துள்ள டெல்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர், சம்பந்தி வேதமூர்த்தியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முதலமைச்சர் அவசரமாக ஓசூரிலிருந்து சென்னை புறப்பட்டார். அவர் மாலை 6 மணிக்குள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை கிருஷ்ணகிரியில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.