தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய உலகிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். நடிப்புடன் இணைந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் அவர், கடந்த ஆண்டு தன் பெயரிலேயே ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ரேஸிங் அணியை தொடங்கி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தய தகுதிச்சுற்றில் அஜித்குமார் ரேஸிங் அணி 7-வது இடத்தை பிடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல், தற்போது ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற பந்தயத்துக்கு முன் ரசிகர்களிடம் பேசிய அஜித், மோட்டார் ஸ்போர்ட்ஸின் கடினத்தை உணர்த்தியுள்ளார். அவர் கூறியதாவது:
“நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸை சுலபமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் கடினமான விளையாட்டு. மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்தியாவில் ஊக்குவிக்க வேண்டும். நம்மிடம் பல திறமையான இந்திய டிரைவர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தினால், ஒருநாள் இந்தியா F1 உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும்.”
அஜித்குமார் ரசிகர்களிடையே வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். ஆனால் அந்த படம் தொடங்க இன்னும் சில காலம் ஆகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















