கோவை : விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் ரஞ்சித், எம்.பி. கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்ததோடு, தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வல தொடக்க விழாவில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் திரையுலக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசனை விமர்சித்த ரஞ்சித்
மேடையில் உரையாற்றிய நடிகர் ரஞ்சித், “நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறோம். பொட்டி வைப்பதிலும், சாமி கும்பிடுவதிலும் கூட பிரச்னை. என்னை 100 முறை சங்கி என்று அழைத்தாலும் கவலைப்படவில்லை. அதை நான் மார்தட்டி ஏற்றுக்கொள்கிறேன். இந்துமதம் யாரையும் கொலை செய்ய சொல்லாது, அன்பை மட்டுமே போதிக்கும். எனது காரை ஓட்டுபவர் கூட இஸ்லாமிய சகோதரர் தான். எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறுபட்டது” எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை விமர்சித்த அவர், “சமீபத்தில் தவெக மதுரை மாநாட்டில் விஜய், ‘நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன், பிழைப்பு தேடி வரவில்லை’ என்று பேசியிருந்தார். யாரைப் பற்றி சொல்கிறார்? எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா, விஜயகாந்த்தாவா, அல்லது கமல்ஹாசனா? எனக்குத் தோன்றுவது, கமல்ஹாசனை நேராகச் சொல்ல முடியாமல் இப்படிச் சொன்னாரோ என்று. உண்மையில் பிழைப்பு தேடி அரசியல் செய்பவர் கமல்ஹாசனே” என்று கடுமையாக தாக்கினார்.
விஜயை ஒருமையில் பேசியது சர்ச்சை
தவெக தலைவர் விஜயை குறித்து அவர், “2014-ல் கொடிசியாவில் மோடி முன்னால் பூனை போல உட்கார்ந்து இருந்தாய் தம்பி. அப்போது எதற்காக வந்தாய்? கடலுக்காகவா, மீனவர்களுக்காகவா? இல்லை உன் படம் ஓட வேண்டுமென்றுதானா? இப்போது ‘திரு மோடி ஜி’ என்று கையசைத்து பேசுகிறாய். பழையதை எல்லாம் மறந்துவிட்டாயா? தம்பி, உன் மூளையில் பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும், “முதல்வரை uncle என்று கூப்பிடுகிறாய், பிரதமரை Mr Modi என்று சொல்கிறாய். உன்னை நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆகப் போகிறார்கள்? எனக்கு வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல தோன்றுகிறது” என ஒருமையில் விஜயைச் சந்தித்து பேசினார்.
இந்த உரையாற்றல் சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு, விஜயை ஒருமையில் பேசியது தொடர்பாக நடிகர் ரஞ்சித் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.