ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 12, 2025) வெளியிட்டது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், ஆண்டுக்கு ஆண்டு 30% உயர்ந்து ரூ.4,004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.3,074 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வருவாய் 12.7% அதிகரித்து ரூ.64,232 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.57,013 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் ஹிண்டல்கோவின் ஒருங்கிணைந்த EBITDA 9% உயர்ந்து ரூ.8,673 கோடியாக உள்ளது. ஜூன் 30, 2025 நிலவரப்படி, ஒருங்கிணைந்த நிகரக் கடன்-க்கு-EBITDA விகிதம் 1.02 மடங்காக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.24 மடங்காக இருந்தது.
பிரிவு வாரியான செயல்திறன் – நோவெலிஸ்
சராசரி அலுமினிய விலைகள் அதிகரித்ததன் விளைவாக, நோவெலிஸ் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13% உயர்ந்து $4.72 பில்லியனாக உயர்ந்தது. எனினும், அதிக ஸ்கிராப் விலை மற்றும் கட்டணச் செலவுகளின் தாக்கத்தால், சரிசெய்யப்பட்ட EBITDA 17% குறைந்து $416 மில்லியனாக பதிவானது. ஏற்றுமதி அளவு 1% அதிகரித்து 963 கிலோடன் (KT) ஆக உயர்ந்துள்ளது.
முதல் காலாண்டு முடிவுகள் சந்தை நேரத்தில் வெளியாகியதால், ஹிண்டல்கோ பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.02% சரிவுடன் ரூ.666 என்ற விலையில் முடிந்தது.














