சென்னை :
சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ நடத்திய 15-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் நிறுவனர் நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், கார்த்தி, நடிகை தேவயானி, இயக்குநர் வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசும்போது கமல்ஹாசன், “கல்விதான் இந்த நாட்டை ஆயுதமின்றி செதுக்கக்கூடிய சக்தி. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, நீட் சட்டம் காரணமாக மருத்துவ கல்வி கனவு நிறைவேறாமல் பல மாணவர்கள் துவண்டனர். அகரம் அறக்கட்டளை பெரும் முயற்சியை எடுத்தாலும், அந்தச் சட்டம் கல்வியை பறித்து விட்டது. அதனால்தான் ‘நீட் வேண்டாம்’ என்கிறோம்” என்றார்.
மேலும், “மக்கள் பெரும்பான்மை அறிவற்ற முடிவுகளை எடுக்கும் காலத்தில், அறிவே நம்மை காப்பாற்றக்கூடிய ஆயுதம். கல்வியைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்க வேண்டாம். நான் நேற்று முதல்வருடன் பேசும்போது, இந்த வகை கல்வி அறக்கட்டளைகளை அரசு உறுதியாக ஆதரிக்க வேண்டும் என கேட்டேன். நல்ல திட்டங்கள் எதிரியிடமிருந்தாலும் பெற்றுக்கொள்ளுங்கள். அரசும் அதே பாதையில் செயல்படுகிறது என்பது மகிழ்ச்சி,” என்றார்.
அகரம் என்பது என் நன்றியுணர்வும், உங்களுடைய விடாமுயற்சியுமே – சூர்யா
விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா, “அகரம் என்பது என்னுடைய நன்றியுணர்வும், உங்கள் விடாமுயற்சியும்தான். இந்த அழகான பயணத்தில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்காக நன்றி,” என்று கூறினார்.
இந்த விழா கல்வியின் முக்கியத்துவத்தையும், சமூக மேம்பாட்டில் கலந்துகொள்ளும் பல முன்னணி பிரபலங்களின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துக்காட்டியது.