நாகையில் 53 பள்ளிகள் 100% தேர்ச்சி – 35 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த கீழ்வேளூர் எம்எல்ஏ லதா.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் கல்வி துறையில் சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 93.36 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் அரசு பள்ளிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மொத்தம் 35 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக மட்டுமல்லாமல், சில இடங்களில் அவற்றை மிஞ்சியும் சாதனை படைத்துள்ளன.இந்த சாதனையின் ஒரு பகுதியாக, திருக்குவளை அருகே உள்ள கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி சாதனை நிகழ்த்தியுள்ளனர்.இந்த பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரை பாராட்டும் வகையில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா நேரில் வந்து மாணவி பவித்ராவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் ஒட்டுமொத்த சாதனையை அவர் பாராட்டினார்.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த பேட்டியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் இது. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால், பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும், என தெரிவித்துள்ளார்.மேலும், பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தனது முக்கிய கோரிக்கையாகவும் அவர் குறிப்பிட்டார்.
