சென்னை: 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், இன்று 50 ஆண்டு திரை வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். அப்படத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.
அதன்பின் பல வெற்றி படங்களில் இணைந்து நடித்த இருவரும், பின்னர் தனித்தனி பாதையில் சென்று இந்திய சினிமாவின் முக்கிய தூண்களாக உயர்ந்தனர்.
இந்த ஆண்டில், ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், கிங் நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 35 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – சத்யராஜ் கூட்டணி மீண்டும் காட்சியளிக்கிறது.
இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கூலி படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தனது நண்பர் ரஜினிகாந்தின் அரை நூற்றாண்டு திரை வாழ்க்கையைப் பாராட்டி கமல்ஹாசன், எக்ஸ் தளத்தில்,
“சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், எனது அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். இந்த பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி திரைப்படம் உலகளாவிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.













