மாஸ்கோ: உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதலில், ரஷ்யாவின் 41 முக்கிய போர் விமானங்கள் அழிந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது, இருநாட்டு போரின் ஆரம்பத்திலிருந்து ரஷ்யா சந்தித்த மிகப்பெரிய விமானப்படை இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரோன்கள் தாக்கிய முக்கிய ரஷ்ய விமான தளங்கள்
இந்த தாக்குதல்கள், மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய விமானப்படை தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமாக Tu-95 மற்றும் Tu-22 போன்ற குண்டு வீசும் போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விமானங்கள், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் குண்டு வீச்சு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தன.
சூசைட் டிரோன்கள் மூலம் பயங்கர தாக்குதல்
உக்ரைன், சிறிய அளவிலான சூசைட் டிரோன்களை கருப்பு போன்ற நிறங்களில் பெயிண்ட் செய்து, ரேடாரில் பிடிபடாமல் மிகவும் தாழ்வாக பறக்கச் செய்து, விமானங்கள் நிறுத்தப்பட்ட ஹேங்கருக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
300க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரஷ்ய விமானப்படை மிக மோசமான சேதத்தையும், எதிர்பாராத இழப்புகளையும் சந்தித்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்வினை என்னவாகும்?
இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்க ரஷ்யா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, இருநாட்டு போரை அடுத்த கட்டத்திற்கே கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.
போரின் பின்னணி: நேட்டோவில் உக்ரைன் சேர விரும்பியதுதான் காரணம்
ரஷ்யா – உக்ரைன் போருக்கான முக்கிய காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதுதான். இது, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
1991-ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின், உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. அதையடுத்து, ரஷ்யாவை சுற்றியிருந்த பல பழைய சோவியத் நாடுகள் நேட்டோவில் சேர்ந்தன. உக்ரைனும் அதில் இணைய முயற்சிக்கையில், ரஷ்யா இதை தடுக்க போருக்கு முந்தியது.