மயிலாடுதுறை இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு, காதலியின் தாயார் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவிப்பு, இதனை அடுத்து உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை கடந்த 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் சில நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக இறந்த வைரமுத்து என்பவரின் தாயார் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஆறு நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார். இக்கொலை சம்பந்தமாக மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலையுண்ட வைரமுத்து என்பவர் அதே ஊரில் தனது சமுகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட பெண் தான் காதலிக்கும் வைரமுத்து என்பவருடன் மட்டுமே வாழ விருப்பம் என்றும் அவரை பதிவு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்களும் அவரது கூட்டாளிகளும் மேற்கண்ட வைரமுத்து என்பவரை கடந்த 15.09.2025ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து உறவினர்களுடன் இன்று காலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து கொலை வழக்கு சம்பந்தமாக 1. குகன் (21) த/பெ. குமார், பெரிய தெரு, அடியமங்கலம் 2. அன்புநிதி (19) த/பெ. அன்பரசன், பெரிய தெரு, அடியமங்கலம் 3. பாஸ்கர் (42) த/பெ. சோமு, டவுன் ஸ்டேசன், 4. விஜயா (45) க/பெ.குமார், பெரிய தெரு, அடியமங்கலம், மயிலாடுதுறை ஆகிய 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயா (45) க/பெ.குமார் என்பவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கினை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டபிரிவு மாற்றம் செய்யப்பட்டது இன்று காவல்துறையை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்















