திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரூரான் மாணவர் இல்லத்தில் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தாய் தந்தையை இழந்த 15 வயது சிறுவன் ஒருவன் தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் தனியாக பயணித்த போது கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு அந்த 15 வயதுக்குட்பட்ட சிறுவனை திருவாரூர் நகர் பகுதியில் உள்ள ஆருரான் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் யாரும் இல்லாத நேரத்தில் தப்பி ஓடிவிட்டார் என கூறப்படுகிறது. இது குறித்து ஆரூரான் மாணவர் இல்ல பாதுகாவலர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுவனை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் மன்னார்குடியை சேர்ந்த 13 வயது சிறுமி ஆகிய சிறுமிகள் இருவர் நேற்று தப்பி ஓடினர். இது குறித்து மாணவிகள் பாதுகாப்பு இல்ல காப்பாளர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதியில் ஒரே நாளில் மூன்று நபர்கள் தப்பி ஓடி இருப்பது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















