மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை:- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்க மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவு:-
மயிலாடுதுறை கூறைநாடு திருவள்ளுவர்புரம் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை சத்தமாக பேசியதை அதே தெருவைச் சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த ராஜேந்திரன்(26) அவரது நண்பர்கள் கூறைநாடு கிட்டப்பா தெருவைச் சேர்ந்த சேது(24), சூர்யா(21) ஆகிய மூவரும் 2020 மே 7-ஆம் தேதி மாரிசெல்வத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக, 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி, இவ்வழக்கில் ராஜேந்திரன், சேது, சூர்யா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்மானித்து, மூன்று பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அரசு சார்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜரானார்.

















