நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 21 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே 13ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வுபெற்றார். அதற்குப் பிறகு மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகாவும் ஓய்வுபெற்றார். இதனால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34ல் இருந்து 31 ஆக குறைந்தது.
புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்றதையடுத்து, திங்கட்கிழமை கூடிய கொலீஜியம் கூட்டத்தில், மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி :
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சார்யா
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னு
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருகர்
இந்த மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தைச் சேர்த்து தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் இருந்து 21 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி பட்டு தேவானந்த், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 இலிருந்து 58 ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
உச்சநீதிமன்ற கொலீஜியம் என்பது தலைமை நீதிபதி தலைமையில் இயங்கும் அமைப்பாகும். இது, உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கும், பதவி உயர்வுக்கும், இடமாற்றத்திற்கும் பரிந்துரை செய்கிறது.