திருவாரூர் மாவட்டத்தில் 15000 ஹெக்டேர் அளவுக்கு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கின்றன-எதிர்பார்த்த அளவுக்கு திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லை-நிச்சயமாக நாளைக்குள் தண்ணீர் வடிந்து விடும்- மழையிலும் நீரை வடிய வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என திருவாரூரில் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி..
டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கண்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மீனம்பநல்லூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்ததாவது…
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்ட நிலையில் 15000 ஹெக்டேர் அளவுக்கு தற்போது நீரில் மூழ்கி இருக்கின்றன. மழை மிக அதிக அளவில் இல்லாத காரணத்தினால் நாளை வடிய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் நீர்வளத்துறை அதிகாரிகளும் களத்தில் இருந்து ஆறுகள் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழையிலும் இந்த பணிகள் நடைபெற்று வருவதால் நிச்சயம் நாளைக்குள் தண்ணீர் வடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 15,000 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் மட்டும் ஏழாயிரம் ஹிட்டேர் அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளன.
காப்பீடு செய்வதற்கு குத்தகை விவசாயிகளுக்கு விவசாய எண் தேவை என்று இருந்ததை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் தற்போது விவசாய எண் இல்லாமல் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கள்கிழமை வரை இன்சூரன்ஸ் செய்வதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96 சதவீதம் விவசாயிகள் காப்பீடு செய்துவிட்டனர். மீதமுள்ள நான்கு சதவீத விவசாயிகளும் திங்கள்கிழமைக்குள் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
திருவாரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாக நாளைக்குள் தண்ணீர் வடிந்து விடும் என்று நம்புகிறோம்.
நீரை வடியவைப்பதற்கான அனைத்து வேலைகளையும் மழையிலும் கூட அதிகாரிகள் செய்து வருவதால் நிச்சயம் மழை நீர் வடிந்துவிடும் என நம்பலாம் என உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, திமுக ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஞானவேல், ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
