
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 12-வது ஆண்டு புத்தகத் திருவிழா, தனியார் பள்ளி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி ரிப்பன் வெட்டி, இத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா, வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை வாசகர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில், வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 126 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விகடன், காலச்சுவடு, எதிர் வெளியீடு, பைரவி, பாரதி, வெற்றி மொழி, மங்கை, வள்ளலார், ராஜ் மோகன், வைகை கறை மற்றும் சத்யா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களும், 30 விற்பனையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மொத்தம் 6 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு ரூ.5 மதிப்புள்ள திருக்குறள் புத்தகம் முதல், ரூ.15,000 மதிப்புள்ள அரிய சங்க இலக்கிய நூல்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் படிப்பு, விளையாட்டு, சுய முன்னேற்றம், ஆங்கில நாவல்கள், அறிவியல், சமூகவியல், கணிதம், வேதியியல், அரசியல், வரலாறு, ஆன்மிகம், சமையல், ஜோதிடம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களும் கிடைக்கின்றன. மேலும், நீட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சிறுகதை நாவல்கள் எனப் பரந்த அளவிலான புத்தகங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. புத்தக விற்பனை மட்டுமல்லாமல், வாசகர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், தலைவர்களின் சிறப்புரைகள், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்தத் திருவிழா, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதுடன், அறிவுசார்ந்த ஒரு பண்பாட்டுத் தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.