திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலாவுக்கு புறப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு பரதநாட்டியம் ஆடி சமர்ப்பணம் செய்த பரதநாட்டிய கலைஞர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பக்த மார்க்கண்டேயன் உயிரைக் காப்பாற்றுவதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்பித்த தலம். அபிராமி பட்டருக்காக ஸ்ரீ அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக்கிய புராண வரலாறு கொண்ட தலம். பல்வேறு சிறப்புகளை உடைய ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவின் நான்காம் திருநாளான இன்று விநாயகர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மன் உற்சவமூர்த்திகள் சன்னதி முன்பு எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை மற்றும் பூரணாகுதி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது. ஸ்ரீ அபிராமி அம்மன் கோயிலில் இருந்து யானை வாகனத்தில் புறப்பட்டபோது சென்னை சதங்கை நாட்டியாலயா குரு நந்தினி சிவராமகிருஷ்ணன் தலைமையில் பரதநாட்டிய கலைஞர்கள் பரதமாடி சமர்ப்பணம் செய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. வீதி உலாவாக சென்ற விநாயகர் சண்டிகேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.
