மயிலாடுதுறை திருவிழந்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது சொந்த செலவுக்காக சிதம்பரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில், ரூ.5 லட்சம் மட்டும் திருப்பித்தர வேண்டியிருந்த நிலையில், அவர் கால அவகாசம் கேட்டதை பழனிச்சாமியின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஜூன் 30-ஆம் தேதி, மணிகண்டனின் தந்தை நடராஜனை, பழனிச்சாமியின் அண்ணன் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் காரில் கடத்திச் சென்று நடராஜனின் கைவிரலை துண்டித்து துன்புறுத்தினர். இதுதொடர்பாக, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், பாண்டியன், பன்னீர்செல்வம், மரியாசெல்வராஜ், தேவநாதன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் பிரபல ரௌடியான மண்ரோடு பாண்டியன் என்கிற பாண்டியன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததன்பேரில், பாண்டியனை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.





