திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா:- கடினமான ஆசனங்களை சுலபமாக செய்து காட்டி மாணவர்கள் அசத்தல்:-
7-வது தமிழ்நாடு தேசிய அளவிலான யோகாசன போட்டி 2025 திருச்சி பிவிஎம் குளோபல் பள்ளியில் ஆக.2-ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 600-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக நடராஜபுரம் கனகா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியிலிருந்து 6 மாணவர்கள் மற்றும் 2 தனியார் பள்ளிகளில் இருந்து 4 மாணவர்கள் என மொத்தம் 10 மாணவ-மாணவிகள்; கலந்து கொண்டனர். இதில், கலந்துகொண்ட மாணவர்கள் 4 தங்கப் பதக்கம் மற்றும் 6 வெள்ளி பதக்கங்களை வென்றனர். மேலும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றமைக்காக இந்த மாணவர்களுக்கு மத்திய அரசுப்பணிக்கான பார்ம் 2 சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடராஜபுரம் கனகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் வசந்தி, தலைமையாசிரியர் பொற்செல்வி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறம் செய் அறக்கட்டளை நிர்வாகிகள் ராகவசிவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர். இதில், மாணவ-மாணவிகள் தேசிய விருது பெற்றபோது செய்த ஆசனங்களான விருச்சிகாசனம், சிரசாசனம், ஹாலாசனம், பட்சிமோட்சாசனம், மயூராசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட கடினமாக ஆசனங்களை இலகுவாக செய்து காட்டி அசத்தினர்.
















