மயிலாடுதுறை அருகே மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்:- போர்செட் கொட்டகை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா தலைஞாயிறு வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திநாதன்(28). லாரி ஓட்டுனரான இவர் அந்த தெருவின் நாட்டாமையாகவும் உள்ளார். அத்தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தினம் நாளை நடைபெறவுள்ளதால், விழாவுக்காக வாழைமரங்களை வெட்டி எடுத்து வந்துள்ளார்.
அப்போது வழியில் ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இருவர் யூக்லிப்டஸ் மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததை பார்த்த கார்த்திநாதன் எதற்காக எங்கள் கிராமத்தில் வந்து மரங்களை வெட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கார்த்திநாதனை ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதுடன் கையில் வைத்திருந்த அரிவாளை திருப்பி அதன் பின்பகுதியால் கார்த்திநாதனின் கழுத்து மற்றும் கால் மூட்டில் பலமாக தாக்கியுள்ளனர். இதில், கால்மூட்டின் ஜவ்வு கிழிந்து படுகாயம் அடைந்த கார்த்திநாதனை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தங்கள் கிராமத்தில் வந்து மரங்களை வெட்டியதை தட்டிக் கேட்டதற்காக ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதுடன் தன்னை அரிவாளால் கடுமையாக தாக்கிய ஐயப்பன், அருண் ஆகிய இருவரும் மீதும் தகுந்த சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திநாதன் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, கார்த்திநாதனின் தெருவான வடக்கு காலனி தெருவை ஒட்டியுள்ள வயல் ஒன்றில் உள்ள போர்செட் கொட்டகையை மர்மநபர்கள் தீவைத்துச் சென்றுள்ளனர். இதில், கூரைக்கொட்டகை முழுவதும் எரிந்ததுடன், போர்செட்டும் சேதமடைந்துள்ளது. இருசமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கடையே ஏற்பட்ட பிரச்னை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













