கோவை :
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த பிரவீன் குமார் (24), ‘ஜப்பான்’ என்ற பெயரால் அறியப்பட்டவர். கூலித் தொழிலாளியான இவர், சமீப காலமாக மைசூரில் உள்ள தென்னை நார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை கோவைக்கு வந்த பிரவீன் குமார், தனது நண்பர்களுடன் அசோக் அவென்யூ – பாலாஜி நகர் பகுதியில் உள்ள முட்புதர் அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பிரவீன் குமாருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் பிரவீன் குமாரை கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவர் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு தாக்குதலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த செல்வபுரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரவீன் குமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடந்த மோதலில் கோகுல் கிருஷ்ணன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரவீன் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

















