திருச்சி : திருச்சி பீமாநகர் பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய வகையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீமாநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைசெல்வன் என்ற இளைஞர், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் அவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டபோது, மாசிங்பேட்டை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தாமரைசெல்வனின் வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது.
திடீரென ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதியதில், தாமரைசெல்வன் தரையில் விழுந்தார். அதைத்தொடர்ந்து கும்பல் அரிவாள், கத்தி, கட்டைகளால் அவரை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிர் பிழைக்க முயன்ற தாமரைசெல்வன் அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் ஓடியுள்ளார்.
அங்கு போக்குவரத்து போலீசான செல்வராஜ் என்பவரின் வீட்டின் சமையலறை பகுதிக்குள் புகுந்த தாமரைசெல்வனை, கும்பல் பின்தொடர்ந்து அங்கு சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் நடந்த இந்த தாக்குதலில் தாமரைசெல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ தகவலின்பேரில், திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் அழைக்கப்பட்டு சான்றுகள் சேகரிக்கப்பட்டது.
சில மணி நேரத்திலேயே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சதீஷ், பிரகாகரன், நந்து, கணேசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
போலீசார் தெரிவித்ததாவது:
“தாமரைசெல்வனுக்கும் சதீஷுக்கும் இடையில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம்” என கூறினர்.
இந்த சம்பவம் திருச்சி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















