உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அமைந்துள்ள மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் விழாக் கொண்டாடப்பட்டது.கூத்தாநல்லூரில் பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் லெட்சுமாங்குடி ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வரும் ‘மனோலயம்’ மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 65-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியின் நிறுவனர் ப. முருகையன் ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்த விழாவுக்கு, நிறுவனர் முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையர் சிவரஞ்சனி பங்கேற்றார். இயன்முறை மருத்துவர் பாபுராஜன் வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் மனோலயம் பள்ளி மாணவர்கள் பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் நடத்தினர். மேலும், டிசம்பர் 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் முன்னிலையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளில் மனோலயம் பள்ளியில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாணவர்களை விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
பேச்சுப் பயிற்சியாளர் எஸ். சங்கர், மேலாளர் சுரேஷ் மற்றும் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளைச் சிறப்பு ஆசிரியர்கள் கிரிஜா, சரண்யா மற்றும் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


















