பெண்ணுக்கு பாலியல் தொல்லை. தேமுதிக பிரமுகர் கைது.
மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ஜான் ராஜ்குமார்(வயது 59). இவர் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆவார். மயிலாடுதுறை ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி லதா(53). இவர் கோரைப்பாய் மற்றும் பிளாஸ்டிக் சேர் தெருக்களுக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று நேற்று 10 பிளாஸ்டிக் சேர்களை ஜான் ராஜ்குமாரிடம் விற்பனை செய்துள்ளார். அதில் 2 சேர்கள் உடைந்துள்ளதாக கூறி வேறு சேர்களை எடுத்து வரச் சொல்லி ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மாலை 6 மணி அளவில் புதிதாக 2 சேர்களை எடுத்துக் கொண்டு ஜான் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜான் ராஜ்குமார் லதாவிடம் அந்த 2 சேர்களையும் வீட்டிற்குள் வந்து வைத்துவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார். உடனே அந்த 2 சேர்களையும் எடுத்துக்கொண்டு வீட்டின் ஹாலில் வைத்துள்ளார். அப்போது திடீரென லதாவை ஜான் ராஜ்குமார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லதா, ஜான் ராஜ்குமாரை தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது வெளியே வந்த ஜான் ராஜ்குமார் லதாவை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது, அப்படி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லதா மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்ணிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜான் ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் ராஜ்குமார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
